திருப்பதி: ஆந்திராவில் 12 மணிநேரத்தில் காளி கோயில் கட்டி கிராமத்தினர் சாதனை படைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் கர்ணுால் மாவட்டத்திலுள்ள பாதகந்துகூறு கிராமத்தில் வசிப்பவர்கள் ஒரு காளி கோயிலை கட்ட முடிவு செய்தனர். அதற்காக 7 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். பின் ஆயத்த நிலையில் உள்ள சிற்ப வேலை செய்த சிமென்ட் பிளாக்குகளை வாங்கி வந்தனர். அதை பயன்படுத்தி கடந்த 1ம் தேதி காலை 8:00 மணிக்கு கோவில் கட்டும் பணியை துவங்கி அன்று இரவு 8:00 மணிக்கு கட்டப்பணியை நிறைவு செய்தனர். இப்பணியில் 20 சிற்பிகள் 100 கிராமவாசிகள் பங்கு கொண்டனர். பல மாதங்கள் முயன்று கட்ட வேண்டிய கோயிலை அவர்கள் 12 மணிநேரத்தில் கட்டி முடித்து சாதனை செய்தனர். டிச.6ம் தேதி கோயிலில் காளி சிலை பிரதிஷ்டை நடக்க உள்ளது.