பதிவு செய்த நாள்
06
டிச
2019
12:12
மயிலாடுதுறை: உடல் நலக்குறைவால் ஸித்தியடைந்த தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானத்தில் உடல், மேல குருமூர்த்தத்தில் நேற்று சமாதி வைக்கப்பட்டது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகா சன்னிதானம், சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், உடல்நலக் குறைவு காரணமாக, நேற்று முன்தினம் தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் ஸித்தி அடைந்தார். அவரது உடல், நேற்று முன்தினம் மாலை ஆதீனத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு மடத்தில் வைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, சொக்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து, திருநெறிய தெய்வ தமிழ்மன்றத்தில் பொதுமக்கள் தரிசனத்திற்காக உடல் வைக்கப்பட்டது.அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு வீதிகள் வழியாக, மாலை 4.௦௦ மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மேல வீதியில் உள்ள மேல குருமூர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டு. அங்கு சமாதி வைக்கப்பட்டது. இளைய சன்னிதானம், மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த சுவாமிகள், அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்தார்.மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், இளவரசு திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாசதேசிக சத்தியஞான சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட பல்வேறு ஆதீன மடாதிபதிகள், கட்டளை தம்பிரான் சுவாமிகள், நாகை கலெக்டர் பிரவின்நாயர், அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயல் தலைவர் எம்பாவை எஸ். யோகநாதன் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனத் தலைவர் வேதாந்தம்ஜி, தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், நாகை மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.