சிவகங்கை: திருக்கார்த்திகை தினத்தையொட்டி தமிழக கோயில்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் சொக்கப்பனை கொளுத்தி அக்னி சொரூபமாக சிவனை வழிபட்டனர். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது போன்று கிராமக் கோயில்கள் உள்ளிட்ட மற்ற கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
பிரம்மா, விஷ்ணுவுக்கு அடிமுடி தெரியாவண்ணம் சிவபெருமான் அக்னி பிழம்பாய் காட்சியளித்ததை நினைவுகூறும் பொருட்டு இவ்வழிபாடு நடந்தது. இதற்காக கோயில்கள் முன்பு மூங்கில் கம்பை சுற்றி பனை ஓலைகளை கோபுரவடிவில் கட்டிவைத்தனர். சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், அதே தீபாராதனை மூலம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. எரியும் தீப்பிழம்பை பக்தர்கள் சிவ சிவ என்று கூறி வலம் வந்து தரிசித்து வழிபட்டனர். எரிந்த முடிந்த சாம்பல், குச்சிகளை போட்டி போட்டு எடுத்துச்சென்றனர். இவற்றை வீட்டில் வைத்திருந்தாலோ வயலில் துாவினாலோ நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தபோது மூன்றடி மண்ணுக்காக திருவிக்ரமனாக விண்ணை முட்டும் அளவுக்கு காட்சி தந்ததை நினைவுபடுத்தும் விதமாகவும் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.