பதிவு செய்த நாள்
11
டிச
2019
03:12
திருப்பூர்: திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, பரணி தீபம், திருக்கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொழுத்தப்பட்டது.
கார்த்திகை மாதத்தில் வரும், கார்த்திகை நட்சத்திர நாளில், திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களிலும், கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து, சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று மாலை, உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 6:10 மணிக்கு, பரணி தீபம் மற்றும் திருக்கார்த்திகை தீபத்தை, கோவில் சுற்றுப்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். தொடர்ந்து, பரணி தீபம் ஏற்றியதை தொடர்ந்து, கொடிமரம் அருகே, திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.அண்ணாமலையாருக்கு அரோகரா... என்ற கோஷத்துடன், பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில், சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த சொக்கப்பனையை வலம் வந்து மக்கள் வழிபட்டனர். அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டியிலுள்ள சிவாலயங்களில், திருக்கார்த்திகை தீப திருவிழா, இன்று மாலை நடக்கிறது.இருளை விலக்கியஅகல் விளக்குகள் திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி, நேற்று மாலை, அனைத்து வீடுகள், தொழிற்சாலைகள், கடைகள் முன், அகல்விளக்கில் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன. வீட்டு நுழைவாயில், கதவுகள், சமையல் அறை, பூஜை அறை, சுற்றுச்சுவரில், அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வாசலில், கோலமிட்டு, கோலத்தின் மீதும் அழகாக தீபம் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. மக்கள் குடியிருப்பு பகுதிகள், கார்த்திகை தீப ஒளியில் பிரகாசமாக மின்னி கொண்டிருந்தன.