பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானின் அருகில் வீற்றிருப்பவர் சண்டிகேஸ்வரர். பக்தர்களின் சிவாலய தரிசனப் புண்ணியக் கணக்கினை எழுதுபவர் இவரே. இமைப்பொழுதும் இறை தியானத்திலிருந்து விலகாதவர். சண்டிகேஸ்வரரை பற்றி சில வித்தியாசமான செய்திகள் தரப்பட்டுள்ளன. தஞ்சாவூர் திருவிடைமருதூரில் சண்டிகேஸ்வரருக்கென தனித் தேர் இருக்கிறது. குடந்தை தாராசுரத்தில் சிம்ம கர்ண சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார். சென்னை பேரூரில் உள்ள சிவாலய சண்டேசர் கவுபீனம் மட்டுமே அணிந்து காட்சியளிக்கிறார். நேமம் கோயிலில் 65 செ.மீ உயரத்தில் சண்டீசர் சிலை மூலவராகவும் 3 செ.மீ விக்ரகம் உற்சவராகவும் உள்ளதைக் காணலாம். மேலூருக்கு அருகே உள்ள அரிட்டா பட்டியில் சண்டேசரின் திருநாமம் தண்டேசர் என வழங்குகிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வடக்குப்புற படிக்கட்டில் கிழக்கு இடுக்கில் தவக்கோல சண்டீசரைக் காணலாம். அத்துடன் இங்கு தான் சண்டிகேஸ்வரருக்கென மிகப்பெரிய சன்னதியும் அமைந்துள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் கையில் மோதிரம் அணிந்த சண்டேஸ்வரரும், காலில் கொலுசு அணிந்த சண்டிகேஸ்வரியும் காட்சி தருகின்றனர்.