பதிவு செய்த நாள்
21
ஏப்
2012
02:04
சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்திற்கு அருகில், தெற்கே, நடேசன் தெருவில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமையான கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிறிய ஆலயம் இது. கொடி மரம் இல்லை, பலிபீடம் நந்தி உள்ளன. கோயிலுக்கு பின்புறம் திருக்குளம் உள்ளது. மூலவர் தீர்த்தபாலீஸ்வரர். தீர்த்தகபாலீஸ்வரர் என்றும் பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. தீர்த்தம் பாலிக்கும் ஈஸ்வரர் தீர்த்தபாலீஸ்வரர், கடலிலே தீர்த்தம் கொடுக்கச் செல்லும் கபாலீஸ்வரர் வந்து தங்கும் கோயில். அம்பாள் திரிபுரசுந்தரி தெற்கு நோக்கி பத்மபீடத்தில் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். உட்பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தங்கள் உள்ளன. உட்பிரகார முகப்பு வாயிலில் விநாயகரும், முருகனும் உள்ளனர். வெளிப்பிராகாரத்தில், தென்மேற்கில் சிதம்பர விநாயகர், வடமேற்கில் வள்ளி முருகன், தெய்வானை, கிழக்கில் சனீஸ்வரர், வீர ஆஞ்சநேயர், நவகிரக சன்னதிகள் உள்ளன. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று மட்டும் சுவாமி மீது சூரிய ஒளி நேரடியாக விழுகிறது. மாசிமக விழாவன்று இறைவனும் இறைவியும் சூரியன் உதயத்திற்கு முன்பே சமுத்திரத்திற்கு எழுந்தருளி தீர்த்தம் பாலித்து அருளாசி வழங்குவர்.