வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க மனிதனுக்கு சுய நலமும் அதிகரிக்கிறது. வீட்டிற்கு அவசிய மான பொருட்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால் ஆடம் பரத்தில் திளைத்து தேவை யற்ற பொருட்களை வாங்குபவர்களே அதிகம். போதாக் குறைக்கு பாவத்திற்கு ஆளாக்கும் கொடிய பழக்கங்களும் பணத்தால் வருகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான்வெஸ்லி என்ற போதகர் குறைந்த வருமானத்தில் வாழ்ந்தார். ஆண்டு வருமானம் 30 பவுண்டு தான். இதில் 2 பவுண்டு தர்மச்செலவு செய்வார். மீதியை சொந்த செலவுக்கு பயன்படுத்துவார். ஒரு கட்டத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பேராசிரியர் பணி கிடைத்தது. ஆண்டு வருமானம் 1600 பவுண்டு. அதன் பின் ஆடம்பரமாகச் செலவழித்தார். அவரது வாழ்க்கை முறையே மாறியது. ஆடம்பரமான வீட்டில் குடியேறினார். விலை உயர்ந்த படங்களால் வரவேற்பு அறையை அலங்கரித்தார்.
அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்காரச் சிறுமி ஒருத்தி வந்தாள். அப்போது குளிர்காலம். ஆனால் குளிரைத் தாங்கும் ஆடைகள் இல்லாததால் நடுங்கினாள். அவளைக் கண்ட ஜான் வெஸ்லி, ""தேவையற்ற செலவுகளால் பணத்தை வீணடித்தேனே! அதில் இவளுக்கு நாலைந்து கோட் வாங்கி கொடுத் திருக்கலாமே! இவளைப் போல எத்தனையோ ஏழைகள் குளிரில் நடுங்குவார்களே! அவர்களுக்கு உதவாமல் போனேனே?” என கண் கலங்கினார். தன்னிடத்தில் இருந்த இரக்க உணர்வை, அளவுக்கு அதிகமான பணம் பறித்து விட்டதை எண்ணி வெட்கப்பட்டார். மனம் திருந்தி தன் வருமானத்தை தர்மவழியில் செலவழிக்க முடிவு செய்தார். முன்போலவே 28 பவுண்டுக்குள் சுயதேவைகளை நிறைவேற்றினார். மீதியை ஏழைகளுக்கு கொடுத்தார். பணம் வாழ்விற்கு அவசியம் தான். ஆனால் தீமைக்கு இழுத்துச் செல்லும் அளவுக்கு இருப்பது கூடாது. தேவை போக, மீதிப் பணம் பசியுள்ளவனுக்கு ஆகாரமாக மாறட்டும். நோயாளிக்கு மருந்தாகட்டும். அனாதை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் ஆறுதல் அளிக்கட்டும்.