ஒரு வீட்டில் இருந்த தாத்தா, தன் பேரன்களை ஒழுங்காகப் படிக்கச் சொல்லி நச்சரிப்பார். இதனால் தாத்தாவை குழந்தைகளுக்கு பிடிக்காது. அந்த பேரன்கள் கிளி ஒன்றை வளர்த்தனர். அதற்கு பேசக் கற்றுக் கொடுத்தனர். அதன்படி கிளியும், ""தாத்தாவே செத்துப் போ, தாத்தாவே செத்துப் போ” என திரும்பத் திரும்பச் சொல்லியது. தாத்தாவுக்கு வருத்தம். ஒருநாள் பாதிரியாரின் வீட்டுக்குப் போனார் தாத்தா. அங்கேயும் ஒரு கிளி இருந்தது. அது அங்கு நடந்த பிரார்த்தனையைக் கேட்டு, "ஆமென்..ஆமென் என்றது.
இந்தக் கிளியுடன் நம் வீட்டுக்கிளிக்கும் சேர்ந்தால் நல்ல புத்தி வரும் என நினைத்தார் தாத்தா. "தாத்தாவே செத்துப் போ என வீட்டுக்கிளி சொல்ல, "ஆமென்...ஆமென் (அப்படியே ஆகட்டும்) என்றது பாதிரியார் வீட்டுக்கிளி. கேலி செய்கிறதே என்பதற்காக திருத்த நினைத்த தாத்தாவிற்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. ""முன் நிலையிலும் அவன் பின் நிலைமை அதிகக் கேடுள்ளதாக இருக்கும்” என்றொரு வசனம் உண்டு. விமர்சகர்கள் எக்காலத்திலும் திருந்த மாட்டார்கள். அவர்களை பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது.