சபரிமலை: சபரிமலையில் ஐயப்பனுக்கும், மாளிகைப்புறத்தம்மனுக்கும் புஷ்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் ஒன்று புஷ்பாபிஷேகம். மாலையில் தீபாராதனைக்கு பின்னர் 7:00 மணி முதல் 9:00 வரை ரோஜா, தெற்றி, துளசி, முல்லை, அரளி, செவந்தி, வில்வஇலை என ஏழு வகை பூக்களால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெறும்.இதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், கூடைகளில் நிரப்பும் பூக்களை பக்தர்களே எடுத்து வந்து சன்னதியில் பூஜாரிகளிடம் கொடுக்கலாம். அவர்கள் அபிஷேகம் செய்வதை பார்த்து வழிபட முடியும். இது முடிந்ததும் பக்தர்களுக்கு பூக்களும், மாலைகளும் பிரசாதமாக வழங்கப்படும்.நாளுக்கு நாள் புஷ்பாபிஷேகம் நடத்தும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கும் நீண்ட வரிசை காணப்படுகிறது. தேனி, பெங்களூருவில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது.தற்போது மாளிகைப்புறத்தம்மன் கோயிலும் புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு தனியாக 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.