ஆரியங்காவு :கேரள மாநிலம் ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் நேற்று கோலாகலமாக நடந்தது. சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த புஷ்கலாதேவியை தர்ம சாஸ்தா மணந்ததாக ஐதீகம். சவுராஷ்டிரா மக்களை சம்பந்தி முறையாக கருதி திருக்கல்யாண அழைப்பிதழ் அனுப்பி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் தேவசம்போர்டு கவுரவிப்பது வழக்கம்.இதனால் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இருதரப்பும் இணைந்து ஆண்டுதோறும் திருக்கல்யாணத்தை நடத்தி வருகின்றனர்.
ஜோதிரூப தரிசனம்: இந்த ஆண்டு திருக்கல்யாண விழா நேற்று முன்தினம் துவங்கியது. கேரள மாநிலம் மாம்பழத்துறையில் பகவதி என அழைக்கப்படும் ஆரியங்காவு புஷ்கலாதேவி கோயிலில் நேற்று முன்தினம் புஷ்கலாதேவியை ஜோதி ரூபத்தில் டி.கே.சுப்பிரமணியன் தலைமையில் ஆரியங்காவு அழைத்து வந்தனர். ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோதியை ஆரியங்காவு மேல்சாந்தி அனிஷ்குமார் ஏற்று அய்யனோடு அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது.
தாலப்பொலி ஊர்வலம்: திருக்கல்யாணத்தை முன்னிட்டு தாலப்பொலிஎனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்தது. இதில் மலையாள பெண்கள் பாரம்பரிய உடையணிந்தும் குழந்தைகள் குறுத்தோலைகளை ஏந்தியும் வந்தனர். மங்கல விளக்குகள், கரகம், காவடி, நையாண்டி மேளம், ஜண்டை வாத்திய மேளத்துடன் யானை மீது சுவாமி நகர் வந்தார். வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி கற்பூரம் காண்பித்து மலர்களை துாவி சுவாமிக்கு பக்தர்கள் வரவேற்பளித்தனர்.
பாண்டியன் முடிப்பு: கோயில் ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்புஎனும் நிச்சயதார்த்த விழா நேற்று இரவு 9:00 மணிக்கு நடந்தது.அய்யன் சார்பில் ஆரியங்காவு கோயில் அட்வைசரி கமிட்டி தலைவர் சுரஷே், செயலாளர் சரசன், அம்பாள் சார்பில் சங்க தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுச் செயலாளர் எஸ்.ஜெ.ராஜன் நிச்சயதார்த்த தாம்பூலம் மாற்றி கொண்டனர். இருதரப்பு நிர்வாகிகளுக்கு சம்பந்தி முறை சம்பிரதாயங்கள் நடந்தன. சங்க நிர்வாகிகள் ஹரிஹரன் கண்ணன் ஆனந்தம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம், சம்பந்தி விருந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
திருக்கல்யாணம்: திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று டிச.26 அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து 5:00 மணிக்கு மூலஸ்தானத்தில் அபிஷேகம் செய்யப்படும். மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.கோயில் நாடக மேடையில் வரவேற்பு நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகள் முடிந்து சுவாமி அம்பாள் அலங்கார சப்பரங்களில் புறப்பாடு நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. நாளை மண்டலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.