சபரிமலையில் மூன்று நாட்களில் 3 லட்சம் பேர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2020 10:01
சபரிமலை: மகரவிளக்குக்காக சபரிமலை நடை திறந்த மூன்று நாட்களில் மூன்று லட்சம் பேர் தரிசனம் செய்தனர். ஜனவரி முதல் தேதி மட்டும் 4.95 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச. 30-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நேற்று முன்தினம் இரவுக்கு பின் கூட்டம் சற்று குறைந்தது.
புல்மேடு வழியாக 36 ஆயிரம் பேரும் பெருவழிப்பாதை வழியாக ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேரும் வந்துள்ளனர். முதல் மூன்று நாட்களில் மூன்று லட்சம் பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். கார்த்திகை முதல் தேதி துவங்கி ஜன. முதல் தேதி வரை வருமானம் 172 கோடியாக அதிகரித்தது. ஜனவரி முதல் தேதி மட்டும் வருமானம் 4.95 கோடி ரூபாய்.
பக்தர்கள் உஷார்: கூட்டம் அதிகமானதை தொடர்ந்து பக்தர்களை ஏமாற்றும் முயற்சிகளும் தொடங்கியுள்ளது. டீ 150 மிலி இருக்க வேண்டும். ஆனால் 140 மிலி. கப்களில் தரப்படுகிறது. இதையடுத்து ஏராளமான கப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒன்றாம் தேதி கூட்டம் அதிகரித்தபோது மரக்கூட்டத்தில் போலீசாருக்கும் ஆந்திர பக்தர்களுக்குமிடையே லேசான மோதல் ஏற்பட்டது. சில பக்தர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பு பக்தியும் அனுபவமும் உள்ள போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.