சபரிமலை: வனத்துறையின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் புல்மேடு பாதை வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழக பக்தர்களுக்கு அதிகமாக பயன்படும் பாதைகளில் புல்மேடு பாதையும் ஒன்று. வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், புல்மேடு, பாண்டித்தாவளம் வழியாக சன்னிதானம் வரமுடியும். சத்திரத்தில் இருந்து சன்னிதானம் வரை 12 கி.மீ.,துாரம் நடக்க வேண்டும். உப்புப்பாறை வரை உள்ள ஆறு கி.மீ. துாரத்தில் ஐந்து இடங்களில் வனத்துறை சார்பில் கொதிக்க வைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
புல்மேட்டில் வனத்துறை சேவை மையத்தில் கஞ்சி, கிழங்கு போன்ற உணவு வகைகள் கிடைக்கிறது.வனத்துறையின் யானை பறக்கும் படை அதிகாரிகளின் பரிசோதனைக்கு பின்னரே பக்தர்கள் புல்மேடு பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சத்திரத்தில் இருந்து பக்தர்கள் குழுக்களாக அனுப்படுகின்றனர். இந்த சீசனில் இதுவரை காட்டு விலங்குகளால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நடப்பு சீசனில் நேற்று வரை 34 ஆயிரத்து 629 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். கடந்த சீசனை விட 10 ஆயிரம் பேர் அதிகம். மகரவிளக்கு நெருங்கும் போது இப்பாதை வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இங்கு பி.எஸ்.என்.எல். தற்காலிக டவர் அமைக்க உள்ளது. மகரஜோதி தரிசனத்துக்கு இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.