சபரிமலை: மகரஜோதி விழாவுக்கு சபரிமலை தயாராகிறது. 12ம் தேதி எருமேலி பேட்டை துள்ளலும், 13ம் திருவாபரண பவனி புறப்பாடும் நடைபெறுகிறது.
மகரஜோதி தரிசனத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே உள்ளன. தேவசம்போர்டும், அனைத்து அரசு துறைகளும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.எருமேலியில் 12ம் தேதி பேட்டை துள்ளல் நடக்கிறது. அன்று பகல் 12:00 மணிக்கு அம்பலப்புழா, பகல் 3.00 மணிக்கு ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளுகின்றனர். ஜோதி தரிசனத்தன்று மூலவருக்கு அணிவிக்கப்படும் திருவபாரண பெட்டி 13ம் தேதி மதியம் பந்தளத்தில் இருந்து புறப்படும். இரவு அயிரூர் புதியகாவு கோயிலிலும், 14ம் தேதி ளாகா சத்திரத்திலும் தங்கி 15ம் மாலை 6:25 மணிக்கு சன்னிதானம் வந்தடையும்.
15ம் தேதி மாலை 6:00 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரமும், தொடர்ந்து மகர ஜோதியும் காட்சி தரும். பம்பை முதல் சன்னிதானம் வரை தற்போது நான்காயிரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 600 விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரி ராஜீவ் கூறினார்.
சாஸ்தா கோயில் திறப்பு: மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணமாக மூடப்பட்டிருந்த பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயில் நேற்று திறக்கப்பட்டது. ஆனால் திருவாபரண தரிசனம் தொடங்கப்படவில்லை. 11,12 தேதிகளில் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் பந்தளம் அரண்மனையில் திருவாபரணத்தை தரிசிக்கலாம் என்று நிர்வாகக்குழு செயலாளர் நாராயாணவர்மா தெரிவித்தார்.