பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
11:04
கம்பம்:கம்பம் ஸ்ரீ நந்தகோபாலன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கம்பம் ஒக்கலிக சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழுவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஸ்தம்பம், ராஜகோபுரம், விநாயகர், கிருஷ்ணன், சாலைக்கோபுரம், நவக்கிரகம் மற்றும் நாகதேவதைகளுக்கு மகா கும்பிஷேகம் நடந்தது. கடந்த 23-ல் யாக பூஜைகளை தந்துரி முக்கின் பிரம்மஸ்ரீ லால்பிரசாத் பட்டாத்திரி ஆகம விதிப்படி துவக்கி வைத்தார். 2 நாட்களாக பல்வேறு வேள்விகள், ஆராதனைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு க.புதுப்பட்டியில் உள்ள உண்டேனவர் குலதெய்வம் ஸ்ரீசந்தனதேவி அம்மன் சன்னதியில் இருந்து தானவானாக்காரர்கள் கோபுர கலசங்களோடு வந்தனர். நான்காம் கால வேள்வி துவங்கியது. தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதல் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் தலைமை குருக்கள் சதாசிவ குருக்கள் மற்றும் திருப்பதி, உடுப்பி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய வைணவத் தலங்களில் இருந்து வந்த பட்டாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோபுரங்களில் புனித நீர் தெளிக்க, கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய "கோபாலா "கோபாலா கோஷம் விண்ணை முட்டியது. அன்னதானம் வழங்கப்பட்டது. கம்பம் ஒக்கலிகர் சமூக நாட்டாண்மை பார்த்திபன், திருப்பணிக்குழு தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சேகர், ஸ்ரீ நிர்மலாநந்தநாத சுவாமி, ஸ்ரீ சோமேஸ்வரநாத சுவாமி, மூன்று மாவட்ட துணைத் தலைவர் சிவாஜி மோகன், ஊஞ்சாம்பட்டி ஊராட்சித்தலைவர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, ஒக்கலிகர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளியங்கிரி தலைமையில், மாவட்ட செயலாளர் ஏ.கே.எம். செந்தில்குமார் முன்னிலையில், மாநில கவுரவ தலைவர் கோவை தொழிலதிபர் ஆறுமுகசாமி திறந்து வைத்தார்.