பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
11:04
திருநெல்வேலி: பாளை. திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் சித்திரைத்திருவிழா துவங்கியது. மே 3ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. பாளை. கோமதிஅம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் (சிவன்) கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்புபூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு சுவாமி மகுட வாகன வீதியுலா நடந்தது. திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, சுவாமி பல்வேறு வாகன வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆறாம் திருநாளான 30ம்தேதி 63 நாயன்மார் வீதியுலா நடக்கிறது. எட்டாம் திருநாள் காலை 8 மணிக்கு கூத்தபெருமான் வெள்ளைசாத்தி வீதியுலா, காலை 10 மணிக்கு பச்சைசாத்தி வீதியுலா, மாலை 4 மணிக்கு கங்காளநாதர் வீதியுலா, இரவு 8 மணிக்கு கைலாசபர்வதம் வாகன உலா நடக்கிறது.
3ம்தேதி தேரோட்டம்: 9ம்திருநாளான மே 3ம்தேதி காலை 7.35 மணிக்கு மேல் 8 மணிக்குள் தேரோட்டம் துவங்குகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் வீதிகளில் வலம் வருகின்றனர். 10ம்திருநாள் காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் சாமித்துரைப்பாண்டியன், கட்டளைதாரர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.