பதிவு செய்த நாள்
27
ஏப்
2012
10:04
சென்னை: இஸ்கான் கோவில் கும்பாபிஷேகத்தில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சார்பில் ராதா கிருஷ்ணர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் முடிவுற்று நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று நாள் யாகசாலை : இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ள, ராதாகிருஷ்ணர், லலிதா விசாகா, கவுர நிதாய், ஜகந்நாதர், பலதேவ், சுபத்ரா மற்று கிருஷ்ண பலராவ் மூர்த்திகள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு, ஜெயபாதகா தலைமையில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, முக்கால பூஜைகள் நடந்தன. பின், நேற்று காலை 9 மணிக்கு கும்பத்திற்கு நன்னீராட்டு பெருவிழா நடந்தது.
குவிந்தனர் பக்தர்கள் : கும்பாபிஷேகத்தையொட்டி, இஸ்கான் கிளைகள் உள்ள திருவனந்தபுரம், பெங்களூரூ, உத்தரப் பிரதேசம், கோல்கட்டா, சேலம், திருச்சி ஆகிய பகுதியில் உள்ள பக்தர்கள் அதிகாலையில் இருந்தே வரத் தொடங்கினர். கும்பத்திற்கு தண்ணீர் ஊற்றும் போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கும்பத்திற்கு நன்னீராட்டு விழா முடிந்ததும் தீபாரதனை காட்டப்பட்டது.
சிறப்பு தரிசனம் : கும்பாபிஷேகம் முடிந்து ஆடை அலங்காரத்துடன் காட்சியளித்த தெய்வங்களுக்கு, அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தரிசனத்திற்காக இரவு 9 மணி வரை கோவில் நடை திறந்து வைத்திருந்தனர். இரவு 9 மணி வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகிகள் சுபத்ரா கிருஷ்ண தாஸ், கவ்ரவ் கிருஷ்ண தாஸ் தெரிவித்தனர்.
அறுசுவை பிரசாதம் : சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் முடிந்ததும், பக்தர்களுக்கு பானகம் மற்றும் மோர் வழங்கப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு அறுசுவை கொண்டபிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் தொடங்கி இரவு வரை, கோவில் வளாகத்தில், கிருஷ்ண பக்தர்கள் பஜனை பாடல்களைப் பாடினர். இதைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.