தூத்துக்குடிக்கு சிருங்கேரி பீடாதிபதி மகா சுவாமிகள் வருகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2012 10:04
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு நான்கு நாள் பயணமாக சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகள் வருகிறார். புதுக்கிராமம் வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். 25 ஆண்டுகளுக்கு பிறகு சிருங்கேரி பீடாதீபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகள் தென் மாவட்டங்களில் விஜயம் செய்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சுவாமிகள் பங்கேற்று மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள். மகா சுவாமிகளின் விஜயம் தூத்துக்குடி மாவட்டத்திலும் நான்கு நாட்கள் நடக்க உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு சிருங்கேரி மகா சுவாமிகள் தூத்துக்குடிக்கு வருவதால் சுவாமிக்கு மிக பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் 30ம் தேதி மாலை சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகள் தூத்துக்குடி வருகிறார். காய்கறி மார்கெட் அருகே சுவாமிக்கு சிறப்பான பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு பக்தர்களால் அளிக்கப்படுகிறது. பின்னர் சுவாமிகள் புதுக்கிராமத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடத்திற்கு பாத்தியப்பட்ட வெங்கடாஜலபதி கோயிலில் தங்குகிறார். மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை சுவாமிகள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பழமையான வெங்கடாஜலபதி கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடத்தப்பட்டு கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகத்தை சிருங்கேரி மகா சுவாமிகள் நடத்தி வைக்கிறார். இதனை ஒட்டி கோயிலில் 1ம் தேதியில் இருந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 2ம் தேதி வெங்கடாஜலபதி, ஆதிசங்கரர், சாரதாம்பாள் சிலைகளை மகா சுவாமிகள் பிரதிஷ்டை செய்து வைக்கிறார். 3ம் ÷தி கோயில் கும்பாபிஷேகத்தை சுவாமிகள் நடத்தி வைக்கிறார். கோயிலில் தினமும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி சுவாமிகள் பேசுகிறார். 2ம் தேதி சுவாமிகள் தூத்துக்குடி சிவன் கோயில், பெருமாள் கோயில், தெப்பக்குளம் பஜனை மடத்திற்கும் விஜயம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வெங்கடாஜலபதி கோயில் திருப்பணி கமிட்டியினர் செய்து வருகின்றனர்.