பதிவு செய்த நாள்
27
ஏப்
2012
10:04
திருவள்ளூர் : வீரராகவர் கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. வீரராகவர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை, 4.30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பூதேவி, ஸ்ரீதேவி உடனுறையாக உற்சவர் தங்க சப்பரத்தில் திருவீதி உலா வந்தார். மாலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று காலை, அம்சவாகனம், மாலை சூரியபிரபையிலும் எழுந்தருளுகிறார். மூன்றாவது நாளான நாளை, 28ம் தேதி கருட சேவை நடக்கிறது. மாலை, அனுமந்த வாகனத்தில் உற்சவர் வீதி உலா வருகிறார். ஐந்தாம் நாளான, 30ம் தேதி நாச்சியார் திருக்கோலம், 2ம் தேதி திருத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு அலங்காரங்களில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10வது நாளான மே 5ம் தேதி, சனிக்கிழமை பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. அன்று காலை, கண்ணாடி பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் கவுரவ ஏஜன்ட் நரசிம்மன் செய்து வருகிறார்.