பதிவு செய்த நாள்
21
ஜன
2020
12:01
கோவை- பொள்ளாச்சி ரோட்டில், சிங்கராம்பாளையம் பிரிவுக்கு எதிரே, எஸ்.எம்.பி.,நகர் குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ளது செல்வவிநாயகர், அன்னபூரணி தாயார் உடனமர் திருசோற்றுத்துறை நாதர் கோவில். 200 ஆண்டுகள் பழமையான, ஆலமரத்தடியில் கோவில் அமைந்துள்ளது.
கிணத்துக்கடவு, மாமாங்கத்தில் இருந்து ஓடி வரும் உப்புகுத்தி ஆற்றங்கரையில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது கோவில். சிவபெருமானுக்கு உகந்த தலவிருட்சம், நீரோடை மற்றும் மயானம் ஆகியன கோவிலுக்கு எதிரே அமைந்திருப்பது சிறப்பு. கோவில் மரத்தடியில், ஒன்றரை அடி உயரத்தில், லிங்க வடிவில், பக்தர்களுக்கு சுவாமிஅருள்பாலிக்கிறார். அருகில் பார்வதி, விநாயகர், முருகனும் அருள்பாலிக்கின்றனர். தினமும், காலை மற்றும் மாலை என, இரு வேளைகளிலும் பூஜை நடக்கிறது. பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. கோவிலில் நித்தமும் நெய்வேத்தியம், வெண்பொங்கல், சுண்டல் படைக்கப்படுகிறது. தினமும், 16 வகை அபிஷேக பூஜை நடக்கிறது.சித்திரையில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அபிஷேக பூஜை கோலாகலமாக நடக்கிறது. சங்கடஹர சதுர்த்தி, திருவாதிரை பூஜைகள் நடக்கிறது.மார்கழி மாதம் 30 நாட்களும், அதிகாலை, 4:00 மணி முதல் திருப்பாவை, திருவெம்பாவை, பாராயணம் நடக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று பரவசம் அடைகின்றனர். மனக்குறையோடு வருபவர்கள் மன நிறைவுடன் வீடு திரும்புகின்றனர். திருமணமாகாத ஆண், பெண்கள், 48 நாட்கள் திருமறை பதியத்தை மனமுருக பாட்டினால், காரியம் கைகூடுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.