பதிவு செய்த நாள்
23
ஜன
2020
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த பிரதோஷ வழிபாடு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று தை மாத தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதில், கோவில் கொடிமரத்தின் அருகில் உள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்டவற்றிற்கு, பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அப்போது, பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில், பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இதேபோன்று, கிரிவலப்பாதையில் உள்ள எட்டு லிங்கங்கள், ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.