பதிவு செய்த நாள்
04
பிப்
2020
11:02
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாள் மற்றும் தை கிருத்திகை நாளையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி தங்க காப்பு கவசத்துடன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை, 9:00 மணிக்கு யாகசாலை பூஜைகள், 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. பகல் 12 மணிக்கு, சூரிய பிரபை வாகனத்தில், உற்சவ மூர்த்திகளான, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தைப்பூசத்திருவிழாவின் இரண்டாம் நாள் மற்றும் தை கிருத்திகை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.