பழநி: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடும் புனித சண்முகநதி பராமரிப்பு இல்லாமல் குப்பை, அமலை செடிகளால் பாழாகியுள்ளது. பழநி முருகன் கோயிலில் நடைபெறும் தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பலர் சண்முகநதியில் குளிக்கின்றனர்.
அதன் பின் உடலில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் மலைக்கோயிலுக்கு வருகின்றனர். இந்தச் சூழலில் சண்முகநதியில் குளிக்கும் பக்தர்கள் பழைய துணிமணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை விட்டுச் செல்கின்றனர். அவ்வாறு குவியும் துணிமணிகள், குப்பை அகற்றப்படாமல் உள்ளது. சண்முகநதியில் அமலச்செடி அதிகளவில் பரவிக் கிடக்கின்றன. குளிக்கும் பகுதிகளில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பக்தர்கள் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சண்முகநதியில் குப்பை, அமலை செடிகளை அகற்ற வேண்டும். இதற்கு பொதுப்பணித்துறை, கோயில் நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களும் நதியை அசுத்தம் செய்யாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.