பதிவு செய்த நாள்
05
பிப்
2020
02:02
திருத்தணி: கன்னி கோவிலில், பத்து கிராம மக்கள், நேற்று, தங்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து, அசைவ உணவுகள் செய்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம் தைக்கிருத்திகை விழா நடந்தது.
இந்த விழாவில், அம்மையார்குப்பம், மத்துார், வங்கனுார், ஆந்திர மாநிலம் சத்திரவாடா, சிந்தலப்பட்டடை, நாராயணவனம் உட்பட பத்து கிராம மக்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் முருகப் பெருமானை தரிசித்தனர். பின், மலைக்கோவிலில் தங்கியிருந்து, நேற்று, காலை, 6:00 மணிக்கு, மேற்கண்ட கிராம மக்கள், திருத்தணி அருகே உள்ள கன்னிகோவிலுக்கு நடந்து சென்றனர். பின், கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்தும், அசைவ உணவு வகைகள் தயாரித்து, குடும்பத்துடன் சிறப்பு பூஜை செய்து, சாப்பிட்டு மகிழ்ந்தனர். குடும்பத்துடன் அனைவரும் கோவில் வளாகத்தில் ஓய்வு எடுத்து, நேற்று, மாலையில் அவர்களுது சொந்த கிராமங்களுக்கு திரும்பி சென்றனர். கடந்த, 32 ஆண்டுகளாக, மேற்கண்ட, 10 கிராம மக்கள் தைக் கிருத்திகை மறுநாள், கன்னிக்கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.