பதிவு செய்த நாள்
06
பிப்
2020
12:02
திருவாரூர்: ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நாளை 7ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு சுவாமி சிலைகளுக்கு கண் திறப்பு, அஷ்டபந்தனம், விக்ரக சுத்தி மற்றும் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி அஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆஞ்சநேய ஸ்வாமி 33 அடி உயரத்திற்கு விஸ்வரூபமாய், கைகளைக் கூப்பியபடி, இடுப்பில், சஞ்சீவி மூலிகைகளான இறந்தவர்களை உ யிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்த" மிருத சஞ்சீவினி, தேகத்தில் புகுந்திருக்கும் ஆயுதங்களின் துகள்களை வெளியேற்றும் "விசல்ய கரணீ, விழுப்புண்களை ஆற்றி சாதாரண தேகத்தை கொண்டு வரும் "ஸாவர்ண கரணீ’’, உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கும் "ஸந்தான கரணீ ஆகியவற்றுடன் உள்ளது உலகில் வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு. ஆஞ்சநேய சுவாமிக்கு வலது புறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இடதுபுறம் ஸ்ரீ கோதண்டராமர் தனித்தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இந்த கோவில் திருப்பணிகள் ஸ்தாபகர் ரமணி அண்ணா மற்றும் ஸ்ரீஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தால் செய்ய வைக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனையடுத்து ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி அஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நாளை 7ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் (மீன லக்னத்தில்) நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று காலை 6 மணி முதல் எட்டு மணிக்குள் ஆஞ்சநேயர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், மற்றும் பவ்ய ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, ராமகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஸ்தபதிகள் வெள்ளி சுத்தியல் மற்றும் தங்க சிலைகளின் கருவிழி மண்டலங்களை திறந்து வைத்தனர். சுவாமி சிலைகளின் கண் திறந்தவுடன் முதலில் கோ தரிசனமும், தொடர்ந்து ஆச்சாரிய தரிசனமும் பின்னர் பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. அதனையடுத்து சுவாமி சிலைகளுக்கு அஷ்டபந்தனம், விக்ரக சுத்தி மற்றும் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச் சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபினவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை ஒன்பதாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து விமானத்தில் பொருத்தப்பட உள்ள கலசங்கள் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.
அதனை அடுத்து உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் திருக்கரத்தால் விக்ரக சுத்தி, அபிஷேகம் செய்தார். பூஜையின் முடிவில் சுவாமி சிலைகள் மற்றும் கோவிலை அமைத்த ராமகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் மீனாட்சிசுந்தரம் ஸ்தபதியை சுவாமிகள் ஆசீர்வதித்து பிரசாதங்களை வழங்கினர். நிகழ்ச்சிகளில் கோவில் ஸ்தாபகர் ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.