பதிவு செய்த நாள்
08
பிப்
2020
10:02
கடலுார்: வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில், இன்று காலை 149வது தைப்பூச ஜோதி தரிசன நடந்தது.
கடலுார் மாவட்டம் வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப் பூசத்தையொட்டி, நேற்று கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து இன்று காலை 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி, முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10:00 மணி, மதியம் 1:00, இரவு 7:00 மற்றும் 10:00 மணி, நாளை (9ம் தேதி) காலை 5:30 மணி என ஆறு காலம் 7 திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.ஜோதி தரிசனத்தை யொட்டி, கடலுார் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கவும், மது மற்றும் மாமிச கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக கூடுதல் பஸ்கள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப் பட்டுள்ளன. எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில், 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுகின்றனர். 21 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.