பதிவு செய்த நாள்
08
பிப்
2020
11:02
திருவாரூர்: ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமர்சையாக நடந்தது; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி குரு ஸ்தலத்தை அடுத்துள்ள, ஞானபுரி சித்ரகூட சேத்ரத்தில், சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, நேற்று காலை, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. யாகசாலை பூஜையை, தினகர் சர்மா தலைமையிலானோர் நடத்தினர். நேற்று காலை, 9.2? மணிக்கு குடங்கள் புறப்பட்டு, கோவிலை வலம் வந்து, ஆஞ்சநேயர், கோதண்டராமர், லட்சுமி நரசிம்மர் சன்னிதி விமானங்களை அடைந்தது. தங்க குடத்தில் எடுத்துவரப்பட்ட புனித நீரை, சகடபுரம் சங்கராச்சாரியார் கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள், 9:47 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமி விமான கலசத்தில் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து கோதண்டராமர், லட்சுமி நரசிம்மர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்தாபகர் ரமணிஅண்ணா, கோதண்டராமர் சன்னதி விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். பின், சுவாமிகளுக்கு அபிஷேகம், மகா பூஜை, தீபாராதனை, பஞ்சபட்ச நைவேத்தியம் செய்யப்பட்டது. விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நன்னிலம் டி.எஸ்.பி., சுகுமாறன் தலைமையில், 250க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கும்பாபிஷேகத்தின்போது, ஹெலிகாப்டர் மூலம், கோவில் கோபுரம் மீது மலர்கள் தூவப்பட்டன. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மாலை, வெள்ளி ரதத்தில், ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளி, கோவிலை வலம் வந்தார். சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 3,300 கிலோவில், 5 வகை மலர்களால் புஷ்ப விருஷ்டி செய்யப்பட்டது.