பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தைப்பூச தெப்ப திருவிழா கோலகலமாக நடந்தது.
செப்பேடு புகழ் சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தெப்ப திருவிழா, 55 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. இதற்காக கோயில் எதிரேயுள்ள தெப்பத்தில் நீர் நிரப்பப்பட்டு, சுற்றுச்சுவர், நடு மண்டபங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலை போன்று ஆறு கால பூஜை உள்ளிட்ட ஐதீகங்கள் பின்பற்றப்படுகின்றன. ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று சிவகங்கை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையால் தெப்பத்திருவிழா நடைபெறவில்லை. பக்தர்களின் தொடர் வலியுறுத்தலால், இந்தாண்டு தெப்பத்திருவிழா நடத்த அறநிலையத்துறை அனுமதி வழங்கியது.மாலை 4:30 மணிக்கு பாலசுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன் நகர்வலம் சென்றார். அதன்பின் சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரர், விநாயகர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நகர்வலம் அழைத்து செல்லப்பட்டனர். இரவு 9:00 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளினர். ஐதீகப்படி 11 முறை தெப்பத்தை தேர் சுற்றி வந்தது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வர்த்தக பிரமுகர் துர்கா.வஜ்ரவேல், காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விரியன்சுவாமி, தக்கார் சுரஷே், கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் கணேசன் பங்கேற்றனர்.