பதிவு செய்த நாள்
11
பிப்
2020
10:02
கேரள மாநிலம் பந்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பிறப்பையொட்டி மாசி மாத பூஜைக்காக வரும் 13 ம் தேதி (பிப்.,13) ல் ஐயப்பன் சன்னிதானத்திற்கான நடை மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரு மகஷே் மோகனரு முன்னலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். அன்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது மற்றும் பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் (பிப்., 14) காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். அன்று முதல் பிப்., 18 வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
தொடர்ந்து இந்த நாட்களில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறும். வழக்கமான பூஜைகளுடன் கோவில் தந்திரி கண்டரு மகஷே் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பின் 18 ம் தேதி இரவு நடை அத்தாழ பூஜைக்கு பிறகு நடை அடைக்கப்படும். சபரிமலை கோவில் நடை திறப்பையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா போன்ற நகரங்களில் இருந்து பம்பைக்கு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.