கிடப்பில் மணிமண்டபம் அறிவிப்பு: வீணாகும் வரலாற்று சின்னங்கள்
பதிவு செய்த நாள்
12
பிப் 2020 11:02
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தளி பேரூராட்சி. இப்பகுதி, முன்பு, விஜயநகர பேரரசில், பிரிக்கப்பட்ட பாளையங்களில், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.தளியை தலைமையிடமாகக் கொண்டு, எத்தலப்பர் வம்சாவளியினர் ஆட்சி செய்துள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போரில், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனுக்கு உதவியாக தளி பாளையக்காரர்கள் இருந்துள்ளனர்.
இதையடுத்து, தளி பாளையம் மீதும், ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். இந்த போரின் இறுதியில், பாளையக்காரர்களின் அரண்மனை, இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அணையில் கிடைத்த வரலாறுபி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், திருமூர்த்தி அணை கட்டப்படும் போது, பாலாற்றின் கரையில், எத்தலப்பர் வம்சாவளியினர் சிலைகள், அவர்கள் வழிபட்ட, சுவாமி சிலைகள் கிடைத்தது. இதை காண்டூர் கால்வாய் அருகே, ஆலமரத்தின் கீழ் மேடை அமைத்து, வரிசையாக வைத்தனர். நீண்ட காலத்துக்கு பிறகு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக உடுமலை பாளையக்காரர்கள் போரிட்ட வரலாறு குறித்த ஆய்வுகள் துவக்கப்பட்டது.
அதில், 1801ம் ஆண்டை சேர்ந்த சில கல்வெட்டுகள், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட, தடுப்பணை கல்வெட்டு, சிலைகள், துாக்கு மேடை கல்வெட்டுகளை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, சுதந்திர போராட்ட வீரர்களை சிறப்பிக்கும் வகையில், எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, உடுமலை பகுதி மக்களிடையே எழுந்தது. மறந்து போன அறிவிப்பு: தளி பாளையக்காரர் எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைத்து, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை சிறப்பிக்க வேண்டும் என மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.கடந்த, 2018ல், திருமூர்த்திமலையில், சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், 2019, சட்டசபை கூட்டத்தொடரில், எத்தலப்பருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பையும், அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு உடுமலை பகுதி மக்கள் வரவேற்பு அளித்து, மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால், அடுத்த கட்ட பணிகள் துவங்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆலமரமும் அவுட்!
திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே, சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைக்கு பாதுகாப்பாக இருந்த ஆலமரமும் தற்போது காய்ந்து வருகிறது. இதனால், வெட்ட வெளியில், பல நுாற்றாண்டுகளை கடந்த சிலைகள், பொலிவிழந்து பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு, அப்பகுதியில் அறிவிப்பு பலகையும், மேற்கூரையும் அமைத்தால், வரலாற்று சின்னங்களை பாதுகாக்க முடியும்.
|