உத்தமபாளையம், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக திருப்பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்து தந்தபின் திருப்பணிகள் துவங்கும் என தலைவர் .சண்முகம் தெரிவித்தார்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மிகவும் புராதானமானதும், பிரசித்திபெற்றதுமாகும். தென்காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது. ராகுகேது தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. காசிக்கு அடுத்தபடியாக ஆறு தெற்கு நோக்கி பாயவும், ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி கோயில் இருக்கும்படி அம்சம், இங்கு தான் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த கோயில் திருப்பணி நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்துவிட்டதால், தற்போது திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்கென உத்தமபாளையம் மற்றும் கோகிலாபுரத்தை சேர்ந்த 46 பேர் கொண்ட திருப்பணிக்குழு, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி எம்.சண்முகம் தலைமையில் நியமிக்கப்பட்டது. அவர்கள் துணைமுதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துப்பெற்றனர். திருப்பணிக்குழு தலைவர் கூறுகையில், கோயிலில் 16 பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 4 பணிகள் அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும். மற்றவை உபயதாரர்களை கொண்டு செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக அறநிலையத்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து மதிப்பீடு செய்து தர வேண்டும். விரைவில் மதிப்பீடு செய்யும் பணிகள் துவங்கும். அதற்கு பிறகு திருப்பணிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.