பதிவு செய்த நாள்
15
பிப்
2020
10:02
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே உள்ள, உப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் விழாவை, இரு தரப்பினரும் தலா இரு நாட்கள் நடத்துவது என, தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.
கொங்கணாபுரம் அருகே, உப்பாரப்பட்டியில் மாரியம்மன் கோவில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சொந்தமானது. ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதத்தில் திருவிழா நடத்துவது வழக்கம். ஆண்டுதோறும் சுவாமி ஊர்வலம், கோவிலில் உள்ள சிவப்பு வர்ணம் பூசிய குதிரை மீது தான் நடக்கும். இந்நிலையில், கோவிலில் ஏற்பட்ட தகராறால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ஒரு குதிரை செய்யப்பட்டு, அதற்கு வெள்ளை வர்ணம் பூசப்பட்டது. அப்போதிலிருந்து, சுவாமி ஊர்வலம் எந்த குதிரையின் மீது நடப்பது என்பதில், ஒவ்வொரு ஆண்டு திருவிழாவின் போதும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தாண்டுக்கான திருவிழா, அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் சுவாமி ஊர்வலம் எந்த குதிரையின் மீது நடக்கும் என்பது தொடர்பாக, நேற்று இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், நான்கு நாட்கள் நடைபெறும் விழாவில், இரண்டு நாட்கள் சிவப்பு குதிரை மீதும், இரண்டு நாட்கள் வெள்ளை குதிரை மீது சுவாமி ஊர்வலம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. செயல் அலுவலர் கோகிலா, ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.