திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸர் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்றுக்காலையில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். வில்வாரணீயம் என்று அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி பெரிய நாயகி உடனுறை பிறவி மருந்தீஸர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 16 நாட்களாக நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்றுக்காலையில் 6.30 மணிக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வடம்பிடித்து தேரோட்டத்தை துவங்கி வைத்தார். இதில், செயல் அலுவலர் நீதிமணி, தொழிலதிபர் கருணாநிதி மற்றும் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள், நகர பிரமுகர்கள் பங்கேற்றனர். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு தியாகராஜ பெருமான் தேருக்கு எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மதியம் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்துல் ஹமீது மற்றும் போலீஸார் செய்திருந்தனர். நான்கு வீதிகளில் வலம் வந்த திருத்தேர் நேற்று இரவில் ஏழு மணியளவில் மேல வீதியில் நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.