திருக்கோஷ்டியூரில் மாசித்தெப்பம்: ஊராட்சி சார்பில் அடிப்படை வசதிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2020 11:02
திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவத்தை முன்னிட்டு தெப்பக்குளத்தைச் சுற்றிலும் அடிப்படை வசதிகள் செய்ய துப்புரவுப் பணியை ஊராட்சியினர் துவக்கியுள்ளனர்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் மார்ச்சில் துவங்குகிறது. வைரவன்பட்டி ஜோசியர் தெப்பக்குள படித்துறையில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுதலும், தெப்பம் முட்டுத்தள்ளுதலும், பகல் தெப்பம், இரவு தெப்பம் என்று 10 நாட்கள் விழாக்கோலம் காணப்படும். இம்முறை பாதுகாப்பிற்காக தேவஸ்தானத்தினர் உபயதாரர் மூலம் குளத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர். அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடுகளை ஊராட்சியினர் முன்னதாகவே துவக்கியுள்ளனர். மாவட்ட கலெக்டர் 2 இயந்திரங்களை அனுமதித்துள்ளார். சிவகங்கை தேவஸ்தானம்,மக்கள் நல குழுவினர், உழவர் மன்றத்தினர் 100 பேர் ஊராட்சி துணைக்குழுக்கள் இணைந்து பல கட்ட பணிகளை துவக்கியுள்ளனர். குளத்திற்கு கடந்த 2 வாரங்களாக நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குளக்கரையைச் சுற்றித் துப்புரவுப் பணி நடைபெற்று வருகிறது. ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், விரிவான வாகன நிறுத்தம் 5 முக்கிய ரோடுகளில் அமைக்கப்படுகிறது. உள்ளூர் ஆட்டோக்கள் மூலம் விழா பகுதியில் நியாயமான கட்டணத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கூடுதலாக கழிப்பறைகள் அமைக்கப்படுகிறது. ஊராட்சி மூலம் 10 இடங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். தன்னார்வலர்கள் மூலம் பல இடங்களில் தண்ணீர்,மோர்ப்பந்தல் அமைக்கப்படும். தெப்பக்குளம் முதல் கோயில் பகுதி வரை மின் விளக்குகள் அமைக்கப்படும். இரு இடங்களில் சுகாதார மையம் செயல்படுத்தப்படும், என்றார்.