பதிவு செய்த நாள்
22
பிப்
2020
01:02
பல்லடம்: அன்னைக்கு, ஒன்பது நாள் நவராத்திரி போன்று, சிவனுக்கு, ஒரு நாள் சிவராத்திரி விழா, வழிபடுவதற்கு உகந்ததாகும் என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் அறிவுறுத்தினார். சிவன் கோவில்களில், சிவராத்திரி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, இரவு முழுவதும் கண்விழித்து சிவனை வழிபட்டனர்.
பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. முதல் கால கேள்வியை துவக்கி வைத்து, கோவை காமாட்சிபுரி ஆதினம் பேசியதாவது: உண்ணாமல், உறங்காமல் சிவராத்திரி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆனால், இன்று மொபைல் போனுடன் சிவராத்திரியை கொண்டாடுகின்றனர். அன்னைக்கு ஒன்பது நாள் நவராத்திரியை போன்று, சிவனுக்கான, சிவராத்திரி விழா, அவரை வழிபட உகந்த நாளாகும். அந்நாளில், இரவு முழுவதும் கண்விழித்து சிவனை ஆராதிக்க வேண்டும். வாழ்க்கையில் யாருக்கும் தீங்கு இழைக்கக் கூடாது. குறிப்பாக, பெற்றோருக்கு தீங்கு இழைப்பது அர்த்தமற்ற வாழ்க்கையாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கோ பூஜை, மற்றும் முதல் கால கேள்வியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, இரவு 9 மணி, நள்ளிரவு 12, மற்றும் அதிகாலை 3 மணிக்கு, நான்கு கால வேள்விகள் நடந்தன. இன்று காலை 6 மணிக்கு, ஐந்தாம் கால கேள்வியும், மஹா தீபாராதனை, மற்றும் அம்மையப்பர் திருவீதி உலாவும் நடைபெறவுள்ளது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.