பதிவு செய்த நாள்
23
பிப்
2020
07:02
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள், லெக்கின்ஸ், டி - சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், கட்டுப்பாடின்றி ஆடை அணிந்து வருவது குறித்து, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, 2016ம் ஆண்டு, இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வேட்டி, சேலை, சல்வார், சுடிதார் அணிந்து, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல உத்தரவிட்டனர்.இது தொடர்பாக, பல கோவில்களில், அறநிலையத் துறை சார்பில், விளம்பர பலகை வைக்கப்பட்டது. ஆனால், ஆடைகள் அணிவது தொடர்பான சர்ச்சை எழுந்ததால், அந்த உத்தரவு முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்வது வழக்கம்.கடந்த வாரம், வெளிநாட்டு சுற்றுலா பயணியர், அநாகரிகமாக உடை அணிந்து வந்தனர்.இது தொடர்பாக, கோவில் நிர்வாகத்திற்கும், வெளிநாட்டினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கபாலீஸ்வரர் கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு, உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளம்பர பலகையும், சமீபத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள், பாரம்பரியமான சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி, துப்பட்டாவுடன் சுடிதார், பஞ்சாபி உடை அணிந்து வர வேண்டும்.டி - சர்ட், பனியன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் போன்ற உடைகளை பெண்கள் அணிந்து வரக்கூடாது. அதேபோல, வேட்டி - சட்டை, முழுக்கால் பேன்ட், சட்டை, ஷர்வானி ஆகிய உடைகளை ஆண்கள் உடுத்தி வரலாம்.கைலி, அரைக்கால் பேன்ட் போன்ற உடைகளை உடுத்தி வரக்கூடாது என, குறிப்பிடப்பட்டுள்ளது.