பதிவு செய்த நாள்
25
பிப்
2020
05:02
பரமக்குடி: பரமக்குடி அங்காள பரமேஸ்வரி மற்றும் வாணி கருப்பண சுவாமி கோயிலில் மாசி மகாசிவராத்திரி பால்குட விழா நடந்தது. இக்கோயிலில் பிப்., 19 இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் மகா சிவராத்திரி பாரிவேட்டை விழா துவங்கியது. மறுநாள் காலை 9:00 மணிக்கு மேல் கோயிலில் கொடி ஏற்றப்பட்டது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது.
பிப்., 23-ல் பாரிவேட்டை நிகழ்ச்சியும், அங்காளம்மன் அன்ன வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்தில் உலா வந்தார். மறுநாள் பைரவருக்கு சந்தன அலங்காரமும், வடைமாலை அணிவிக்கப்பட்டது. இன்று (பிப்.,25) காலை 9:00 மணிக்கு கோயில் வளாகத்தில், கோயில் பவுர்ணமி வழிபாட்டு குழுவினர், ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் இணைந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தனர். விழாவிற்கு நாகரத்தினம் தலைமை வகித்தார். கோயில் அறங்காவலர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மதுரை முத்துலட்சுமிபிரபாகர் கலந்து கொண்டார். தொடர்ந்து பால்குடம் முக்கிய வீதிகள் வழியாக வந்து, அம்மனுக்கும், கருப்பண்ண சாமிக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.