பதிவு செய்த நாள்
27
பிப்
2020
11:02
ஈரோடு: பிராமண பெரிய அக்ரஹாரத்தில், மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, ஏராளமானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம் மாரியம்மன், காளியம்மன் கோவில் நூறு ஆண்டுகளை கடந்துள்ளது. கோவிலில், இந்தாண்டுக்கான குண்டம் விழா கடந்த, 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் முன் கம்பம் நடப்பட்டு பெண்கள் தினமும் புனிதநீர் ஊற்றி வருகின்றனர். 24ல் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் மாவிளக்கு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் விழா நேற்று நடந்தது. கோவில் தலைமை பூசாரி கிருஷ்ணன் முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஒரு சிலர் அலகு குத்தியும், கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன், வீரமாகாளி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், அலகு, அக்கினிசட்டி ஊர்வலம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராடுதல் நடக்கிறது.