பதிவு செய்த நாள்
02
மார்
2020
11:03
மதுரை: கிராமங்களில் இயற்கை சூழலை காக்க முன்னோர்கள் கோயில் இருக்கும் இடத்தில் காடுகளை உருவாக்கினர். கிராமத்து கோயில்கள் பல இயற்கை சூழல் காப்பதோடு பல்லுயிர் பெருக்கும் பொக்கிஷமாக திகழ்வது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று.
இதன் பின்னணி நோக்கி பயணித்தால் இறையம்சம் நிரம்பிய இயற்கையை அறியலாம். கிராமத்தில் வாழ்ந்து மறைந்த மனிதர்களை எல்லை சாமிகளாக வழிபடும் பழக்கம் துவங்கிய போது கோயில் காடுகள் உருவாக துவங்கின. பெரும்பாலும் பீடம், அரிவாள், சூலாயுதம், மரங்களை தான் சாமியாக வழிபட்டனர். பொங்கல், புரவி எடுப்பு என திருவிழா நடத்தி கோயில் காடுகளை கொண்டாடினர். இயற்கை வளங்களை அபகரிக்காமல் இருக்க இறை நம்பிக்கையை மக்களிடம் விதைத்தனர். மரம் வெட்டினால், பழம் பறித்தால் பாம்பு வரும், உயிருக்கு ஆபத்து என பயத்தை ஏற்படுத்தினர். இதற்கு ஏற்ப சில சம்பவங்கள் நடந்ததால் காடுகளை அபகரிக்க நினைக்கவே மக்கள் பயந்தனர். இன்றும் இந்த நம்பிக்கை பொய்த்து போகாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.
பெரிய கருப்பசாமி கோயில்: எல்.வலையபட்டியில் மரங்கள் சூழ்ந்த நடுப்பகுதியில் புரவிகளுடன் காட்சியளிக்கிறது கோயில் காடு. ஆண்டுதோறும் புரவி எடுப்பு திருவிழாவின் போது கொண்டு வந்த வண்ண வண்ண புரவிகள், சாமி சிலைகள் என சிலிர்க்க வைக்கும் அனுபவங்களை அள்ளி தருகிறது. நகரத்து நச்சு காற்றை மறந்து கிராமத்து நல்ல காற்றை இங்கு நெஞ்சார சுவாசிக்கலாம்.
சின்ன கருப்பசாமி கோயில்: கவரயம்பட்டி வெள்ளை மலை அடிவாரத்தில் சின்ன, பெரிய கருப்பசாமி, சொற்கேளா வீரன் சாமிகள் உள்ளன. அருகேயுள்ள ஏழு கன்னிமார் கோயிலில் கிடா வெட்டி விழா எடுப்பது முக்கிய நிகழ்வு. இரவில் எறி சோறு விடும் போது மக்கள் நடமாட்டம் இருக்காது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமம் இருள் சூழ்ந்து விடுகிறது.
தவ முனியாண்டி கோயில்: கொடிமங்கலத்தில் இருக்கும் தவ முனியாண்டி கோயிலில் பீடம் மட்டுமே உள்ளது. இங்கு முனியாண்டி தவ கோலத்தில் இருப்பதால் அமைதி காக்க வேண்டும் என கிராமத்தினர் எச்சரிக்கை செய்தே நம்மை அழைத்து சென்றனர். காட்டில் 70 வகை மரங்கள் வானுயர்ந்து நிற்கிறது. கீச்சிடும் பறவைகள் சிறகடித்து பறப்பதை பார்த்தாலே பரவசமாகும். இங்கு பறவைகளுக்கு கிராமத்தினர் இரை, குடிநீர் வைக்கிறார்கள்.
கிரீன் மதுரையின் ‘ட்ரீ வாக்’: கிரீன் மதுரை சார்பில் மூன்றாவது ஞாயிறு அன்று ‘ட்ரீ வாக்’ என்ற பெயரில் இயற்கை ஆர்வலர்களை கோயில் காடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறோம். இதுவரை 85 முறை சென்று 8000 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். மதுரையில் 15 தனியார் இடங்களில் கோயில் காடுகளை உருவாக்கி உள்ளோம். 160 குடியிருப்பு சங்கங்கள் மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடுகிறோம். அரசு பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள் தருகிறோம். கொடிமங்கலம் முருகேசன், வலையபட்டி அழகன், கவரயபட்டி பொன்னுசாமி, சின்ன காசம்பட்டி மாயழகன் சுற்றுலாவுக்கு உதவியாக இருக்கிறார்கள்.
– என்.சிதம்பரம்
திட்ட ஒருங்கிணைப்பாளர், கிரீன் மதுரை
காட்டுக்குள் அரிய மரங்கள்: தமிழகத்தில் 1750 கோயில் காடுகள் உள்ளன. மதுரை, நத்தம், மேலுாரில் அதிகளவில் இருப்பதை காணலாம். இக்காடுகளில் கடம்பம், மருதம், வக்கனை, அழிஞ்சல், காஞ்சரம், உசிலை மரங்களும் ஓடம், தைலா கொடிகளும் வளர்கிறது. அடர்ந்த காட்டுக்குள் மட்டுமே இருக்கும் அரிய மரங்களும், கொடிகளும் கோயில் காட்டில் இருப்பது பெரிய விஷயம். கோயில் காடுகளை நம்பி பறவைகள், பூச்சிகள், வனவிலங்குகள் பல உள்ளன. இதன் மூலம் பல்லுயிர்கள் பெருகி இயற்கை வளம் காக்கப்படுகிறது. சில பகுதிகளில் கோயில் காட்டுக்குள் தான் கிராமங்களே இருக்கிறது. இயற்கையே இறைவன் என முன்னோர்கள் உணர்த்தியதன் மிகப்பெரிய சான்றுதான் இந்த காடுகள்.
– டி. ஸ்டீபன், உதவி பேராசிரியர், அமெரிக்கன் கல்லுாரி
நல்லதங்காள் கோயில்: வலையபட்டியில் இருந்து சில கி.மீ., தொலைவில் உள்ள பழமையான ஆலமர அடிவாரத்தில் நல்லதங்காள் வீற்றிருக்கிறாள். அருகில் உள்ள ஊருணி கரையில் கரகம் எடுத்து அம்மனுக்கு விழா எடுப்பது கிராமத்தினர் வழக்கம். சிவராத்திரியில் அம்மனுக்கு இலந்தை பழம், வாழை பழம், பனங்கிழங்கு படையலிட்டு வழிபடுகின்றனர்.