பதிவு செய்த நாள்
02
மார்
2020
11:03
சேலம்: மாகாளியம்மன் கோவில் பால்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர். சேலம், உத்திரப்பன் நகர், மாகாளியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, எஸ்.ஆர்.எம்., தோட்டத்திலிருந்து, திரளான பெண்கள், தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். வரும், 4ல் சக்தி அழைப்பு, பொங்கல், அக்னி கரகம், பூங்கரகம்; 5ல் சத்தாபரணம், 6ல் மஞ்சள் நீராடுதல், 7ல் ஊஞ்சல் உற்சவம், 8ல் மறுபூஜை நடக்கவுள்ளன.
மாரியம்மன் கோவிலில்...: சேலம், அரியாகவுண்டம்பட்டி, மகா சக்தி மாரியம்மன் கோவிலில், மாசி திருவிழா, பால்குட ஊர்வலத்துடன், நேற்று தொடங்கியது. காலை, மேள, தாளம் முழங்க, சர்க்கரை புளியமரம் அருகேவுள்ள விநாயகர் கோவிலிலிருந்து தொடங்கிய பால்குட ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள், முக்கிய வீதிகள் வழியாக, கோவிலுக்கு வந்து, மூலவர் அம்மனுக்கு அபி?ஷகம் செய்து வழிபட்டனர். நாளை இரவு, வாணவேடிக்கையுடன் சத்தாபரண ஊர்வலம், வரும், 4ல் மாரியம்மனுக்கு கூழ் வார்த்தல், மலர் அலங்காரத்தில் காமநாயக்கன்பட்டி பெருமாள், சூரமங்கலம் வழியாக, மகா சக்தி மாரியம்மன் கோவிலுக்கு எழுந்தருளல் நடக்கவுள்ளது. மார்ச், 5ல், மாரியம்மனுக்கு சக்தி அழைத்தல், பூங்கரகம் எடுத்தல், சர்வ அலங்காரத்தில் மாரியம்மன், பெருமாள் சுவாமிகள் பவனி வருதல், அலகு குத்துதல், அக்னி கரகம் உள்ளிட்டவை நடக்கும். 6ல் மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் மாசி திருவிழா நிறைவடையும்.
கோட்டை மாரியம்மன்...: ஓமலூர், சரபங்கா ஆற்றின் அருகேவுள்ள, கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த பிப்., 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நாளை காலை, மகட தோரணம் கட்டுதல், இரவு, பச்சனம்பட்டியிலிருந்து அம்மனை அழைத்து வருதல், நாளை மறுநாள் காலை, சக்தி கரகம், பொங்கல் வைத்தல், மாலையில் மாவிளக்கு எடுத்தல், அக்னிகரகம், அலகு குத்துதல் நடக்கவுள்ளது. 5ல் வண்டிவேடிக்கை, 6ல் மாரியம்மன் ஆட்டம், நையாண்டி கரகம், சத்தாபரணம், 7ல் மஞ்சள் நீராடுதல், மெரமனை நடக்கவுள்ளது. இதற்காக, கோவிலை சுற்றி, விளையாட்டு பொம்மை கடைகள், ராட்டினங்கள் அமைக்கும் பணியில், வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்