பதிவு செய்த நாள்
02
மார்
2020
11:03
ஈரோடு: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, கீரைக்கார வீதி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா பிப்., 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் நேற்று அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை பூசாரியும், தர்மகர்த்தாவுமான ஜெகநாதன் முதலில் குண்டம் இறங்கி விழாவை துவக்கி வைத்தார். இதையடுத்து ஒன்பது நாட்களாக, காப்பு கட்டி விரதமிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். பலர் குழந்தைகளுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்தின் இருபுறமும் நின்ற பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டனர். இதை தொடர்ந்து, மாவிளக்கு மாற்றுதல் நடந்தது. இரவில் முத்துப்பல்லக்கில் சிங்க வாகனத்தில், அம்மன் திருவீதியுலா சென்றார். மறு அபிஷேகத்துடன், விழா இன்று நிறைவு பெறுகிறது