மண்டைக்காடு, ஆற்றுக்கால் கோவில்களில் திருவிழா துவக்கம்
பதிவு செய்த நாள்
02
மார் 2020 11:03
நாகர்கோவில்: மண்டைக்காடு மற்றும் கேரளா மாநிலம், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்களில், 10 நாள் திருவிழா நேற்று துவங்கியது.
பெண்கள் இருமுடி கட்டி கடல் குளித்து வழிபடுவதால், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பெண்களின் சபரிமலை என புகழப்படுகிறது.சபரிமலையில், ஆண்கள் மட்டுமே குவிவது போல, திருவனந்தபுரம், ஆற்றுக்காலில் பெண்கள் மட்டுமே குவிந்து, பொங்கல் இடுவர். மிக அபூர்வமாக இந்த இரண்டு கோவில்களிலும், 10 நாள் பொங்கல் விழா நேற்று துவங்கியது.மண்டைக்காடு: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், நேற்று காலை, 7:50 மணிக்கு மேல்சாந்தி சட்டநாதன் குருக்கள் கொடியேற்றினார்.இதில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத், தேவசம் போர்டு தலைவர் சிவகுற்றாலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆற்றுக்கால்: திருவனந்தபுரம் கிள்ளியாற்றின்கரையில் உள்ள, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், 10 நாள் பொங்கல் விழா நேற்று காலை, 9:30 மணிக்கு, பச்சைஓலை பந்தலில், அம்மனை காப்பு கட்டி அமர்த்தியதுடன் துவங்கியது.பின், கண்ணகி வரலாறு பாடும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி காலை, 10:20 மணிக்கு, பல லட்சம் பெண்கள் பங்கேற்கும் பொங்கல் விழா நடக்கிறது.
|