பதிவு செய்த நாள்
03
மார்
2020
11:03
ஆனைமலை நகரில், பல நுாற்றாண்டுகள் பழைமையான தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. 850 ஆண்டுகளுக்கு முன் யானைகள் நடமாடும் ஆனைமலை வனத்தில், புதர்களை சுத்தம் செய்து வழி உருவாக்கி பழங்குடியினர் நடந்து சென்றனர். அப்போது, மண்ணில் புதைந்திருந்த, தர்மராஜா, திரவுபதி, கிருஷ்ணர் சிலைகளை கண்டறிந்ததாகவும், அதன்பின் கோவில் கட்டியதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
பழைமையான இக்கோவில் சன்னிதானத்தில், விநாயகர், ஆனைமாவுத்தர், 60 அடி உயரம் உள்ள கருட கம்பம், துஷ்டதுாய்மனன் சிலைகள் உள்ளன. கருவறையில் மூலவராக தர்மராஜா; இடது பக்கம் திரவுபதியம்மன், வலது பக்கம் கிருஷ்ணர் சத்தியபாமா, ருக்குமணி சிலைகள் உள்ளது. ஐம்பொன்னாலான உற்சவர் தர்மராஜா சிலை உள்ளது. வலது பக்கமாக திரவுபதியம்மன், இடது பக்கம் கிருஷ்ணர், முன்பக்கம் விநாயகர் சிலைகள் உள்ளன. மூலவர் திரவுபதியம்மன் அத்தி மரத்தில் வீற்றிருக்கிறாள், மற்ற சிலைகள் கற்களால் ஆனது என்பது கோவிலின் சிறப்புகளின் ஒன்றாகும். கோவிலில், பக்தர்களுக்கு தர்மராஜா, திரவுபதியம்மன் மட்டுமே காட்சியளிக்கின்றனர். கிருஷ்ணர் மறைந்திருந்து மக்கள் முகத்தை பார்க்காமல், குறைகளை தீர்த்து வைப்பார், தீயதை விரட்டுவார், என்கின்றனர் கோவில் நிர்வாகத்தினர். கோவிலில் வாரந்தோறும், வெள்ளி, சனிக்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. பக்தர்கள் திருமண வரன் வேண்டி வழிபடுகின்றனர். கோவிலில் உள்ள வன்னி மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். ஆண்டுதோறும், சிவராத்திரி அன்று கொடிகட்டி, 18வது நாள் குண்டம் திருவிழா நடக்கிறது. மற்ற கோவில்களைப்போல, திருநீர், குங்குமம் வழங்குவது இல்லை. பச்சரிசி மாவு, கஸ்துாரி மஞ்சள், கூலாங்கிழங்கு மற்றும் பச்சிலையால் தயாரிக்கப்பட்ட, மஞ்சள் நிறத்தாலான திருநீர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.