பதிவு செய்த நாள்
03
மார்
2020
11:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நாளை நடக்கிறது. இதற்காக, தேர் புதுப்பிப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று இரவு அபிஷேகம்; நாளை காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; இரவு, 7:00 மணிக்கு தேர் முதல் நாள் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு 12 அடி உயரமுள்ள மரத்தேரில், விநாயகரும்; 21 அடி உயரமுள்ள வெள்ளி ரதத்தில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் தேர் திருவிழாவில், முதல் நாளான நாளை கோவிலிலிருந்து, மார்க்கெட் ரோடு வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியிலும்; நாளை மறுநாள் (5ம்தேதி) இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்கி, உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியிலும் தேர் நிலை நிறுத்தப்படும்.இறுதி நாளான, (6ம் தேதி) மூன்றாம் நாள் தேர்நிலைக்கு வந்து சேருதல், பாரிவேட்டை நிகழ்ச்சியும், தெப்பத்தேர் வைபவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேரோட்டம் நிகழ்ச்சி நாளை துவங்குவதையடுத்து, அம்மன் எழுந்தருளும் வெள்ளித்தேர் மற்றும் விநாயகப் பெருமான் எழுந்தருளும் தேர் புதுப்பிக்கும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேரில், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.