நாகர்கோவில் : அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தின விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து அவரது தலைமை பதி அமைந்துள்ள சுவாமி தோப்புக்கு பக்தர்கள் பேரணியாக சென்றனர்.
அவரது அவதாரபதி அமைந்துள்ள திருச்செந்துாரில் இருந்தும், அவர் சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் புறப்பட்ட ஊர்வலங்கள் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் நாகராஜகோயில் திடலை வந்தடைந்தன. குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து அய்யா வழி மக்கள் ஊர்வலமாக இங்கு வந்தனர். இரவு அய்யா வழி சமய மாநாடு நடைபெற்றது.நேற்று காலை 6:00 மணிக்கு நாகர்கோவில் நாகராஜாதிடலில் இருந்து, சுவாமிதோப்புக்கு பேரணி புறப்பட்டது.
காவி கொடியுடன் பக்தர்கள் அணிவகுத்து சென்றனர். குழந்தைகள் நடனம் ஆடி சென்றனர். கோட்டார், சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சுவாமிதோப்பை அடைந்தது. இங்கு அய்யா வைகுண்டருக்கு பக்தர்கள் பணிவிடை செய்தனர்.நேற்று காலை முதல் சுவாமி தோப்பு செல்லும் அனைத்து பாதைகளிலும் பக்தர்களுக்கு மோர், குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.