ஒருசமயம் பிதுர்லோகம் சென்றிருந்தார் துர்வாசர். பிதுர்கள் அவர்களை வரவேற்று உபசரித்தனர். அப்போது, அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து, “அம்மா! தாங்க முடியலையே! என்னைக் காப்பாற்றுங்களேன்!” என்ற கூக்குரல் ஒலித்தது. பிதுர்தேவதைகளிடம் துர்வாசர், “என்ன இது சத்தம்?” என்றார். “சுவாமி! பாவிகள் தங்கும் ‘கும்பீபாகம்’ என்னும் நரகம் பக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்து தான் கூக்குரல் வருகிறது,” என்றனர். அங்கு என்ன தான் நடக்கிறது என்று அறியும் ஆர்வத்தில், பிதுர்லோகத்தில் இருந்து கும்பீபாகத்தை எட்டிப்பார்த்தார் துர்வாசர். எமதுõதர்கள் நரகவாசிகளை ஆயுதங்களால் வதைத்துக் கொண்டிருந்தனர்.
பார்க்க சகிக்காமல் கண்களை மூடியபடி,“சிவசிவ” என்று ஈசனை தியானித்தார். பிதுர்லோகத்திலிருந்து விடைபெற்றார். ஆனால், அப்போது கும்பீபாகமே ஒரு சொர்க்க புரியாக மாறியது. அவலக் குரல் மறைந்தது. அனைவரும் வேதனை நீங்கி இன்ப அனுபவம் பெற்றனர். அதிசயம் நிகழ்ந்தைக் கண்ட எமதுõதர்கள் அதிர்ந்து விட்டனர். எமதர்மனை தேடிச் சென்றனர். அவனுக்கும் உண்மை புலப்படவில்லை. கயிலை நாதனான சிவனைச் சரணடைந்தனர். ஞானதிருஷ்டியால் விஷயமறிந்த சிவன் புன்னகைத்தார். “துறவியான துர்வாசர் எட்டிப் பார்த்தபோது, அவரின் நெற்றியில் பூசியிருந்த விபூதி காற்றில் பறந்து நரகலோகத்தை சென்றடைந்தது. ‘சிவசிவ’ என்ற மந்திரத்தின் பலமும் அவர்களை அடைந்தது. இதனால், அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நொடியில் மறைந்தது. இனிமேல் கும்பீபாகம் பிதுர்கள் நீராடும் பிதுர் தீர்த்தமாக மாறும்,” என்றார் சிவன். நரகவாசிகள் அதில் நீராடி சிவகணங்களாக மாறினர். தங்களுக்கு வாழ்வளித்த திருநீற்றினை ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுந்து மந்திரம் சொல்லி பூசி மகிழ்ந்தனர். பிறவிப்பிணி போக்கும் மருந்தான திருநீறை இனியேனும் தினமும் அணிய மறக்க மாட்டீர்களே!