பதிவு செய்த நாள்
05
மார்
2020
10:03
பவானி: பவானி, செல்லியாண்டி அம்மன் கோவில் பண்டிகையின் முக்கிய திருவிழாவான, சேறு பூசி அம்மன் அழைத்தல் ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற, செல்லியாண்டி அம்மன் கோவில் மாசி திருவிழா, பிப்., 18ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 2ல், அம்மனுக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றினர். அம்மன் அழைத்தல்முக்கிய நிகழ்வான, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கியது. அம்மனிடம் அனுமதி வேண்டி, வாக்கு கேட்கப்பட்டது. அலங்கரித்து, அம்மன் மாலை அணிவிக்கப்பட்டிருந்த குதிரை, தன் உடலை சிலிர்த்து துள்ளியதால், அம்மன் அனுமதி கிடைத்ததாக பக்தர்கள் கருதினர்.பின், எல்லையம்மன் கோவிலுக்கு, குதிரையை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து, சிறப்பு வழிபாடுகளுக்கு பின், மீண்டும் கோவிலுக்கு, குதிரையில் அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.பக்தர்களில் பலர், தங்கள் மீது சேற்றை பூசியும், சில்வர் பெயின்ட் பூசியும், அசுரர் வேடங்கள் அணிந்தும் வந்தனர். சில பக்தர்கள், காய்கறிகள், இலைகளால் தங்களை அலங்கரித்து, வாத்திய இசைக்கு ஏற்ப நடனமாடி, ஊர்வலமாக சென்றனர். உப்பு, மிளகுபக்தர்கள் பலரும், தங்கள் தொழில், வியாபாரம், கல்வி, உடல் ஆரோக்கியம் சிறக்க வேண்டுதல் வைத்து, உப்பு, மிளகு, வாழைப் பழங்கள் மற்றும் தானியங்களை சாலையில் வீசினர். ஊர்வலம், கோவிலை அடைந்ததும், ஏராளமான பெண்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.இதையடுத்து, அலகு குத்தி பக்தர்கள் பலரும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர்வலத்தில் சென்றவர்கள், ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.