பதிவு செய்த நாள்
07
மார்
2020
04:03
மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும், அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். மாசிமக ஸ்நானம் செய்வோருக்கு சிவனும் விஷ்ணுவும் உரிய பலன்தரக் காத்திருப்பர். அன்று புண்ணியநதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்கள் விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும்போது சொர்க்கபேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக்கலாம் என ஈசனே பிரமிப்பார். இந்நீராடல் செய்ய இயலாதோர் மாசிமக புராணம் படிக்கலாம் அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே! மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்தசக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும், உடலும் ஆரோக்கியமாகும். இதை புராணமும், விஞ்ஞானமும் கூறுகிறது.
மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித நீராடலாம் என புராணங்கள் சொல்கின்றன தெரியுமா? அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் நாட்கள் தான் அவை. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்மதேவன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி புண்ணியம் அடைந்தன. பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும்.
மாசி மாதத்தில் மகப் பெருவிழா பத்துத் தினங்கள் வரை நடைபெறும். அசுவினி நட்சத்திரம் கூடிய நன்நாளில் கொடி ஏற்றஞ் செய்து எட்டாவது நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளான மகம் நட்சத்திரம் கூடிய முழுநிலவு நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும் சூரியன், கும்ப ராசியிலும் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழா. ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார். அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இதன் பழைய பெயர், திருக்குடந்தைக் காரோணம். மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில். மாசித்திருவிழாவின் பத்தாம்நாளில் கும்பேஸ்வரர் பஞ்சமூர்த்தியுடன் இந்த குளக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார்.
மாசி மாத பூச நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்றுதான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளினார். சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது அன்றைய தினம் தான். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவதுடன், பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான். காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றதும் எலும்புகள் பூக்களாக மாறிய அதிசயம் நிகழ்ந்ததும் மாசிமாதத்தில் தான்.
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில்தான். பன்னிரு ஆழ்வார்களும் ஒருவரான குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார். மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்றுதான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். மாசி மகத்தன்றுதான் காமதகன விழா நடைபெறுகிறது. மாசிமகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. உயர் படிப்பு விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் இந்நாளில் அவற்றைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மகாமக குளத்தின் சிறப்பு: மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதரேஸ்வரர், முக்த தீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவன் கோயில்களுக்கு தலைமையாக கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 15 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தை வெட்டியவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இந்நகரில் ஏழு குளங்கள், மூன்று கிணறுகள், நான்கு காவிரித் தீர்த்தங்கள் உட்பட 14 தீர்த்தங்கள் உள்ளன.
பிற இடங்களில் வாழ்வோர் தங்கள் பாவம் தீர காசியில், கங்கையில் நீராடுவார்கள். காசியில் இருப்போர் செய்த பாவம் தீர வேண்டுமானால் குடந்தை மாமாங்கக் குளத்தில் நீராடுவராம். மகாமககுளத்தில் 66 கோடி தீர்த்தங்கள் கலந்துள்ளன. 9 நதிகளும் மாசியில் வந்து கூடும் இக்குளத்திற்குள் 16 ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இக்குளத்தில் அமிர்த்தம் கலந்துள்ளதால் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதிலும் மகாமகத்தன்று நீராட ஏராளமான புண்ணிய பலன் கிடைக்கும். இக்குளத்தில் ஒருமுறை வலம் வந்தால் பூமியை 100 முறை வலம் வந்த பலன் கிட்டும். இக்குளத்தை வணங்கினால் சிவபிரானோடு சேர்த்து எல்லா தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். இக்குள நீரை சிறிதளவு உட்கொண்டாலே சகலவித பாபங்களும் தீரும். இங்கு நீராட வேண்டுமென மனதால் நினைத்தாலேகூட புண்ணியம்தான். தொடர்ந்து ஐந்து வருடங்கள் மாசிமகத்தன்று மகாமகக் குளத்தில் மூழ்கி எழுவதால் புத்திரபாக்யம் கிட்டும். மகாமகத்தன்று நீராடினால் வாரிசுகளின் ஆயுள் அதிகரிக்கும். மாசிமக நாளில், இங்கு அமைந்த 17 சிவாலயத்தையும், 5 விஷ்ணு ஆலயத்தையும் அத்துடன் மாமாங்கக் குளக்கரையில் பக்கத்துக்கு நான்கு வீதம் அமைந்த பதினாறு சின்ன சிவ சன்னதிகளையும் தரிசிப்பது நல்லது. மாசி மகத்தன்று இத்தனை சுவாமிகளும் இக்குளத்தில் தீர்த்தவாரி காண்பர். அவற்றுள் ஒரு ஆலயமான ஏகாம்பரேஸ்வரர் ஆலய இறைவன் ஏகாம்பரநாதருக்கு பதில் காமாட்சியம்மை தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். அப்பனும் அம்மையும் ஒன்றே என்பதே இதனால் அறியலாம்.