திருப்பதி: திருமலையில் நடந்து வரும் வருடாந்திர தெப்போற்ஸவத்தின் 3ம் நாள் மாலை தெப்பத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வந்தனர்.
திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியை ஒட்டி வருடாந்திர தெப்போற்ஸவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த வியாழக்கிழமை முதல் திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஏழுமலையான் தெப்போற்ஸவம் துவங்கி நடந்து வருகிறது. அதன் 3ம் நாளான நேற்று மாலை 6 மணிமுதல் 7 மணிவரை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 5 முறை தெப்பத்தில் வலம் வந்தனர். இதை முன்னிட்டு தெப்பமும் திருக்குளமும் மலர்களாலும் மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது. தெப்போற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை வசந்தோற்ஸவம் ஆர்ஜித பிரம்மோற்ஸவம் சகஸ்ரதீபாலங்கரா சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மாடவீதியில் வலம் வந்த பின் உற்ஸவமூர்த்திகள் நேரடியாக திருக்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். தெப்போற்ஸவத்தை காண திருக்குளக்கரையில் திரண்ட பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து உற்ஸவமூர்த்திகளை வணங்கினர்.