பதிவு செய்த நாள்
09
மார்
2020
12:03
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயலில் ரணபலி முருகன் கோயிலில் மாசி மகம் உற்ஸவத்தில் நேற்று தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் மாசி மகம் உற்ஸவம் பிப்.25ல் முப்பிடாரி அம்மன் காளியூட்டத்துடன் தொடங்கியது.
பிப். 26 ல் அனுக்ஞை, காப்புக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. பிப்.28 ல் காலை கொடியேற்றம் நடந்தது. திருவிழா நாட்களில் காலை பல்லக்கு, இரவு அன்ன, மேஷ, பூத, கைலாச, யானை, மயில், புஷ்ப வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. மார்ச் 5ல் சுவாமிக்கு முதல் காலத்தில் சிவப்பு, 2 ம் காலத்தில் வெள்ளை, 3ம் காலத்தில் பச்சை அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். பின் பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். தேர் ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், நிர்வாக செயலாளர் பழனிவேல்பாண்டியன், பொறுப்பாளர் ராமு, கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.