பதிவு செய்த நாள்
09
மார்
2020
01:03
வில்லியனுார்:திருக்காஞ்சி மற்றும் ஒதியம்பட்டில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் 60க்கும் மேற்பட்ட சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த 27ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி பாரிவேட்டை, 3ம் தேதி பஞ்சமூர்த்தி வீதியுலா, 6ம் தேதி திருக்கல்யாணம், 7ம் தேதி தேரோட்டம் நடந்தது.
முக்கிய விழாவான மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று உற்சவ மூர்த்தி சங்கராபரணி ஆற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. அதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மேல் உறுவையாறு, மங்கலம், அரியூர், கரிக்கலாம்பாக்கம், கீழ்குமாரமங்கலம், பங்கூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஒதியம்பட்டுகாசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகத்தையொட்டி நேற்று காலை 7:30 மணி அளவில் சங்கராபரணி ஆற்றின் வடபுறத்தில் உற்சவர் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வில்லியனுார், அரும்பார்த்தபுரம், முத்திரையர்பாளையம், கூடப்பாக்கம், வி.மணவெளி, தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் எழுந்தருளினர்.
போக்குவரத்து நெரிசல்: திருக்காஞ்சி கங்கைவராகநதீஸ்வரர் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சாலைகளில், காலை 7:30 மணிக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் திணறினர். ஒதியம்பட்டு சாலையில் 2 கி.மீ., துாரத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், முதியோர்கள் நடக்க முடியாமல் சிரமப்பட்டு திரும்பினர்.